கட்டிப்பிடி வைத்தியம் மூலம் ஆண்களை மயக்கும் சமந்தா – வீடியோ – Professional Cuddler on King 5 Evening Magazine

அமெரிக்காவின் ஒரிகன் மாகாணத்தில் வசிக்கிறார் சமந்தா. ‘கட்டிப்பிடி வைத்தியம்’ என்ற புதிய பிஸினஸை ஆரம்பித்திருக்கிறார். ஆரம்பித்த ஒரு வாரத்துக்குள் சுமார் 10 ஆயிரம் பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொண்டார்கள். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குதான் இங்கே அனுமதி உண்டு. ஒரு நிமிடத்துக்கு 1 டாலர் பணம் வசூலிக்கிறார் சமந்தா. 15 நிமிடங்களில் இருந்து 5 மணி நேரம் வரை அவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். சுத்தமாக வரவேண்டும், நன்றாக உடை அணிந்திருக்க வேண்டும், தீய எண்ணங்களுடன் வரக்கூடாது என்று வாடிக்கையாளர்களிடம் எழுதி வாங்கி வைத்துக்கொள்கிறார்.

வாடிக்கையாளர்களைப் பொறுத்து சிலரைக் கட்டிப்பிடித்து வைத்தியம் செய்கிறார், சிலரிடம் அருகில் அமர்ந்து படிக்கிறார், சிலரிடம் ஆறுதலாகப் பேசுகிறார். தனிமையில் இருப்பவர்கள், துணையை இழந்தவர்கள், மனம் விட்டுப் பேச நினைப்பவர்கள் எல்லாம் இவரின் முக்கியமான வாடிக்கையாளர்கள். எல்லோரும் நல்லவர்களாக இருந்துவிடுவதில்லை என்ற காரணத்தால் பாதுகாப்புக்காக, சிகிச்சையளிக்கும் அறைகளில் கேமராவைப் பொருத்தியிருக்கிறார். ஒருநாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்யும் சமந்தாவிடம், ஒரு வாரத்துக்கு முன்பே அனுமதி வாங்கிவிட வேண்டும்.

அன்பையும் ஆறுதலையும் காசு கொடுத்து வாங்க வேண்டிய காலமா இருக்கு… சே!

லண்டனில் இருபது ஆண்டுகளாக வசித்து வரும் சீனருக்கு தலைவலி, வலிப்பு, நுகரும் திறன் குறைபாடு, ஞாபக மறதி போன்ற பிரச்சினைகள் கடந்த நான்கு ஆண்டுகளாக இருந்து வந்தன. எத்தனையோ பரிசோதனைகள் செய்தும் காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. சமீபத்தில் செயிண்ட் தாமஸ் மருத்துவமனை, மூளையில் இருந்து பயாப்சி எடுத்து, பரிசோதித்தது. மூளையில் மிகச் சிறிய புழு ஒன்று 5 செ.மீ. தூரத்துக்கு இடப்பக்கமும் வலப்பக்கமும் நகர்வது தெரிந்தது. அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டது. மூளைக்குள் புழு எப்படி? சீன மருத்துவத்தில் பச்சையாக கடல் வாழ் உயிரினங்கள், தவளைகள், ஊர்வன போன்ற பிராணிகளைச் சாப்பிடச் சொல்கிறார்கள். அந்த உணவுகளின் மூலமும் தொற்று ஏற்பட்ட உணவுகளின் மூலமும் புழு உருவாகியிருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஐயோ… படிக்கும்போதே தலை வலிக்குதே…

கலிஃபோர்னியாவின் தென்பகுதியில் காயமடைந்த ஓர் ஆந்தை கண்டுபிடிக்கப்பட்டு, விலங்குகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அந்த ஆந்தையின் கண்களில் நட்சத்திரங்கள் தெரிந்தன. உடனே ஆந்தைக்குப் புராண கடவுளான ஜீயஸ் பெயர் சூட்டப்பட்டது. பார்வை இழந்த ஜீயஸின் கண்களில் தெரியும் நட்சத்திரங்களைக் காண மக்கள் திரண்டு வருகிறார்கள். கண்களில் ஏற்பட்ட காயத்தால்தான் ஆந்தை பார்வையை இழந்திருக்கிறது என்றும், தழும்புகள்தான் நட்சத்திரங்கள் போன்று காட்சியளிப்பதாகவும் சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆனால் விளக்கத்தைக் கேட்கத்தான் ஆட்கள் இல்லை!

பார்வை இல்லாத ஆந்தையைக் காட்சிப் பொருளா மாத்திட்டாங்களே… பாவம்!

போலந்து நாட்டில் 91 வயது பாட்டிக்கு மூச்சு நின்றுவிட்டது. வீட்டில் உள்ளவர்கள் மருத்துவரை அழைத்துப் பரிசோதித்தனர். ஒவ்வோர் உறுப்பையும் தீவிரமாகப் பரிசோதித்த மருத்துவர், பாட்டி இறந்துவிட்டதாகச் சொன்னார். சில மணி நேரங்களுக்குப் பிறகு இறுதிச் சடங்குகளுக்கான வேலை நடந்துகொண்டிருந்தது. திடீரென்று எழுந்த பாட்டி, தனக்கு தேநீர் வேண்டும் என்று கேட்டார். அத்தனைப் பேரும் அரண்டு போனார்கள். இது எப்படி நிகழ்ந்தது என்று என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை என்கிறார் இறந்ததாகச் சான்றளித்த மருத்துவர்.

காலை ஆட்டிக்கிட்டே தூங்கணும்னு சும்மாவா சொல்லிருக்காங்க!